தமிழ்நாடு

கோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்

கோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்

webteam

ஆவடியில் கோழிக்கடையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட பிரச்னையால் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சென்னை, ஆவடியை அடுத்த அன்னனூர் பகுதியை சேர்ந்த கவுரிவேல் மற்றும் பிரபு என்பவர்கள் அண்ணன், தம்பி. இவர்கள் இருவரும் ஆவடி பகுதியில் நண்பர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது இறுதிச் சடங்கிற்கு கருப்பு நிற கோழி தேவைப்பட்டுள்ளது. அதை வாங்குவதற்கு கவுரிவேலும், பிரபுவும் ஆவடி மார்க்கெட் சென்றுள்ளனர்.

அங்குள்ள அப்சரா என்ற கறிக்கடையில், கோழி வாங்குவதற்காக விலை கேட்டுள்ளனர். கடை உரிமையாளரான ஜெயாலிணி என்ற பெண், குறிப்பிட்ட விலையை கூறியுள்ளார். அதைவிட சற்று குறைவான விலைக்கு தருமாறு இருவரும் பேரம் பேசியுள்ளனர். பேரம் ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியுள்ளது. நீண்ட நேர வாதத்திற்கு பிறகு கோழி வேண்டாம் எனக் கூறிவிட்டு வேறுகடைக்கு இருவரும் சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயாலிணி இருவரையும் தாக்கியுள்ளார். பதிலுக்கு அவர்களும் தாக்க முயன்றதால், ஜெயாலிணி தன் கடையில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன் மார்க்கெட்டில் இருந்து மற்ற கடைக்காரர்களும், கவுரிவேல் மற்றும் பிரபுவை தாக்கியதாக அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த கவுரிவேல் ஆவடி நகராட்சி அலுவலகத்திற்குள் ரத்தம் வடிந்தபடி தஞ்சமடைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் கவுரிவேல் மற்றும் பிரபுவை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, இருவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுதொடர்பாக இருவரும் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயாலிணியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.