தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசிய ஆளுநர், அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எனக் கூறினார். மேலும் புத்தாண்டு செய்தியாக எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் என்றார்.
இந்தச் சுழலில் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அதன்பின் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் புரோஹித் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாளைய தினம் பேரவையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயணன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஏ.கே. போஸ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, ஜனவரி 7 ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெறவுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதற்கு பதிலுரை அளித்தல், 2018-19ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.