தமிழ்நாடு

கோவையில் உருவாகும் இல்லத் தமிழ் இயக்கம்: பேச்சுத் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு புதுமுயற்சி

கோவையில் உருவாகும் இல்லத் தமிழ் இயக்கம்: பேச்சுத் தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு புதுமுயற்சி

webteam

இன்றைய பேச்சுத்தமிழ், தமிழகத்தில் ஆங்கிலக் கலப்பால் சிதைந்து வருகிறது என்பது துயரளிக்கும் உண்மை. அதை மாற்றியமைக்க ஒருசில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் முழுமையாக வெற்றி பெறவில்லை. தமிழர்களின் வீடுகளில் பேச்சுத்தமிழை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இணையவழி இல்லத் தமிழ் இயக்கம் என்ற முயற்சியை கோயம்புத்தூர் தமிழ் ஆர்வலர்கள், தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழிகாட்டுதலோடு தொடங்கவுள்ளனர்.  

“முதலில் ஆங்கிலக் கலப்பு பேச்சாலும் எழுத்தாலும் தனது சிறப்பையும் வடிவத்தையும் அழகையும் தமிழ் இழந்துகொண்டிருக்கும் நிலையை மக்களிடையே உணரச் செய்யவேண்டும். அந்த விழிப்புணர்வின் வழியாக தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரிடமும் விரும்பத்தக்க மாற்றத்தை, அவரவரே விரும்பி ஏற்கும்படி மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கோவையைச் சேர்ந்த இல்லத் தமிழ் இயக்க ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க காமராசு,  “இத்தகைய மறுமலர்ச்சியை மன்றங்களிலோ அவைகளிலோ தொடங்குவதைவிட இல்லங்களில் தொடங்குவது என்பது இயல்பானதாக அமையும். இல்லத்தில் தொடங்கும் மாற்றம் ஊரிலும் நாட்டிலும் எதிரொலிக்கும். தற்காலத்தில் இணையம் என்ற ஆற்றல்மிகு ஊடகம், பெருநோக்கத்திற்காக மக்களை இணைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர் இல்லங்களை இணையம் வழியாக பேச்சுத்தமிழ் மறுமலர்ச்சிக்கு இணைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் இணையவழி இல்லத்  தமிழியக்கம் உருவாக்கப்படுகிறது” என்றார்.

இல்லத்தமிழ் இயக்கம் தொடர்பாக சில நோக்கங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அவை வருமாறு…

பாலினச் சமத்துவத்தையும் மாண்பையும் மதிக்கும் வகையில் கருத்துகள் அமையவேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் கருத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளதால் தகுதியாலோ, புலமையின் அடிப்படையிலோ யாரும் யாரையும் தாக்கும் வகையில் கருத்துகளைக் கூறவேண்டாம்.

 கருத்துப்பகிரும் வண்ணம் மூன்று வழிமுறைகள் உருவாக்கப்படும். ஒன்று கருத்துக்களம். குறிக்கோள் சார்ந்த இயக்கத்துக்கு வலுசேர்க்கும் கருத்துக்கள் அதில் வெளியிடப்படும். இரண்டாவது சொல் அவை. தவறான சொற்களைக் களையவும், புதிய சொற்களை அறிமுகம் செய்யவும் இது பயன்படும்.  

இது இணையவழி இயக்கம். தடையற்றது, வெளிப்படைத்தன்மை கொண்டது. நாடு, மதம். இனம் கடந்த தமிழ்ப்பற்றாளர்கள் பொதுநோக்கில் இணைவார்கள். எனவே அரசியல், சமய மற்றும் இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் கருத்துகளை யாரும் வெளியிட வேண்டாம்.

மூன்றாவது சொற்பெட்டகம். பேச்சுவழக்கு சிறக்கவும் முந்தைய தலைமுறையின் இல்லத்தில் பேசிய முறையின் அடிப்படையில் வழக்கொழிந்த மற்றும் புதிய பயன்பாட்டுச் சொற்கள் சொற்பெட்டகத்தில் சேகரிக்கப்படும்.

புதிய சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்களை உருவாக்கி அவற்றின் அன்றாட பயன்பாட்டை ஊக்குவித்தல். பயன்பாட்டில் இல்லாத தமிழ்ச்சொற்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல்.

தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்தல் ஆகிய குறிக்கோள் மற்றும் இல்லந்தோறும் தமிழ் ஒளி ஏற்றுவோம்!  உள்ளம்தோறும் தமிழுணர்வு ஊட்டுவோம் என்ற கொள்கைமுழக்கத்துடன் மலர்கிறது இல்லத் தமிழியக்கம்.

 இல்லத் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர் முனைவர் வே. குழந்தைசாமி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழிகாட்டுதலோடு இந்த இயக்கத்தைத் தொடங்குகிறார். இதன் மூலம் பெறப்படும் கலைச்சொற்கள் ஆய்வு செய்யப்பட்டு சொற்குவை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுந்தரபுத்தன்