திருச்சி எஸ்.பி வருண்குமார் எக்ஸ்
தமிழ்நாடு

உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கே தாக்குதல்... சாமானியரின் நிலை? - x தளத்திலிருந்து விலகிய எஸ்.பி

திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, இது குறித்த 8 பக்கங்கள் அடங்கிய பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, இது குறித்த 8 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த மாதம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு, திருச்சி எஸ்.பி வருண்குமார்தான் காரணம் எனவும், அவருக்கு சாதி ரீதியான வெறுப்பு இருக்கிறது எனவும் எஸ்.பி வருண்குமாரை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனால், கோபமடைந்த வருண்குமார், தனது வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.

தொடர்ந்து, சீமானுக்கு எதிராக வருண் குமார் அளித்த நோட்டீஸில், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்தநிலையில்தான், இந்த நோட்டீஸ் அனுப்பியதற்காக, என்னையும் என் குடும்பத்தினரையும் இழிவுப்படுத்தும் வகையில், கருத்துகளையும் , புகைப்படங்களையும் சித்தரித்து தரம்தாழ்ந்த செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்துள்ள வருண்குமார்.. தானும் தனது மனவியும் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து 8 பக்கங்கள் அடங்கிய பதிவை வெளியிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்றும், உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கே இத்தகைய தாக்குதல் நடந்தால், சாமானியர்களின் நிலை என்ன ? என்றும் மிகுந்த கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பதிவில், ”நான் சட்டப்படி Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் பரப்பினர். X தளத்தில் என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது.

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவி அவர்களும் விலக முடிவு செய்துள்ளோம்.

எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும், (Morphing) குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள்தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.

ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும்,அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும்,பெண்களையும் என்ன செய்வார்கள்?..

இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி. ஒரு குடும்ப நபராகவும் காவல் அதிகாரியாகவும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பல்களின் செயற்பாட்டை முறியடிப்பது எனது கடமை. இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.