தமிழ்நாடு

தென்மேற்குப் பருவமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்பு

தென்மேற்குப் பருவமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்பு

நிவேதா ஜெகராஜா
முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் தென்மேற்குப் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது.  இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியே துவங்கினாலும், இடுக்கியில் எதிர்பார்த்த அளவு மழை கிடைக்கவில்லை. ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக ஜூன் இரண்டாவது வாரத்தில் கன மழை பெய்தது. இதனால் விநாடிக்கு 912 கன அடியாக இருந்த அணைக்கான நீர்வரத்து 5,488 கன அடி வரை அதிகரித்தது. அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டி உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக ஓய்ந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து அணை நீர்மட்டம் 133 அடி நோக்கில் குறையத் துவங்கியது.
ஒரு வார இடைவெளிக்கு பின் தற்போது முல்லைப் பெரியாறு அணை முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி தேக்கடி வண்டிப்பெரியார் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் துவங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தமிழக விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.20 அடியாகவும், நீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு 612 கன அடியாகவும் அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாகவும் உள்ளது.