கர்ப்பிணி கஸ்தூரி pt desk
தமிழ்நாடு

ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்.. ரயில்வே கொடுத்த புதிய தகவல்!

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அபாய சங்கிலி முறையாகதான் செயல்பட்டது என்று தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த வாரம் கொல்லம் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் பயணித்த கர்ப்பிணி கஸ்தூரி என்பவர் தடுமாறி தவறி விழுந்தார். இதைக்கண்ட அவரின் உறவினர்கள், ஆபத்து காலத்தில் உதவுவதற்காக ரயிலில் வைக்கப்பட்டுள்ள அபாய சங்கிலியை இழுத்துள்ளனர்.

ஆனால் அதை இழுத்தும் ரயில் நிற்காத காரணத்தால் அவர்களால் கஸ்தூரியை காப்பாற்ற முடியவில்லை. இதனால் பல கிலோமீட்டர் கடந்து சென்ற அவர்கள், அடுத்துவந்த ஸ்டேஷனில் இருந்து திரும்பிவந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரியை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து, “அபாய சங்கிலி சரியாக செயல்பட்டிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம்” என்று கஸ்தூரியின் உறவினர்கள் ரயில்வே நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

இதையடுத்து இதுபற்றி விசாரிக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்லது. இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே தற்போது, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

அதில், “கர்ப்பிணி பயணித்த கொல்லம் ரயிலில் உள்ள 17 பெட்டிகளையும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் அனைத்து அபாய சங்கிலிகளும் வேலை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே விரைவு ரயிலில் கர்ப்பிணி பயணித்த எஸ் 9 உட்பட அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி செயல்படும் நிலையிலேயே இருந்ததுள்ளது. அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரயில் நின்றிருக்கும்” என விளக்கமளித்துள்ளனர்.