கேரள கனமழையை தொடர்ந்து, தமிழக கேரள ரயில் சேவையான கொல்லம் ரயிலின் வழித்தடம் மாறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கி,கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடற்படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம்
இந்த நிலையில் கேரளாவில் பலத்த மழை காரணமாக செங்கோட்டை - புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் கொட்டாரக்கரா, புனலூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.