வல்லக்கோட்டை ஶ்ரீ சுப்பிரமணியசாமி pt desk
தமிழ்நாடு

வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி திருக்கோயில் சூரசம்ஹார விழா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்! என்ன நடந்தது?

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை ஶ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் சூரசம்ஹார விழா 4 ஆவது ஆண்டாக ரத்து என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், முருக பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோயிலில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் திருக்கோயிலை புதுப்பித்து புணரமைப்பு செய்யும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

வல்லக்கோட்டை ஶ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில்

இந்த நிலையில் கோயிலில் வருடம் தோறும் நடக்கும் கந்த சஷ்டி விழா கடந்த 2 ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்களாக மூலவர் முருகப் பெருமானுக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கந்த சஷ்டி விழாவில், விமர்சையாக நடக்கும் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம், புணரமைப்பு பணிகள் காரணமாக இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சூரசம்ஹாரம் விழா புணரமைப்பு பணிகள் காரணமாக 3 வது ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெகுவிமரிசையாக நடைபெறும் சூரசம்ஹாரம் விழா கடந்த 4 வருடங்களாக நடைபெறாததால் முருக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.