சூரசம்ஹாரம் file image
தமிழ்நாடு

திருச்செந்தூரில் இன்று கோலாகலமாக நடக்கிறது கந்த சஷ்டி விழா!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் குவிந்து வருகினறனர்.

webteam

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

இதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கந்தசஷ்டி மண்டபம் வந்தடைந்தனர். பின்னர் சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இதனையடுத்து மாலை 4:00 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், சுவாமி ஜெயந்திநாதர் முதலில் யானை முகம் கொண்ட தாரகா சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்கிரார். பின்னர் தன் சுய முகம் கொண்ட சூரபத்மனை தனது வெற்றி வேலால் வதம் செய்கிறார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்து சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொள்வர்.

Thiruchendur temple

இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண்பதற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக காவல்துறை சார்பில் 2 காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு கோடி சந்தாதாரர்களை பெற்ற நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில், சூரசம்ஹார நிகழ்வு நேரலையில் இன்று மாலை 4 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. நேரலையை காண, யூ-ட்யூப் பக்கத்தில் இணைந்திருங்கள்!