தமிழ்நாடு

கொரோனா முடிவுகள் வராததால் சிகிச்சையில் தாமதம்.. உடனே சிகிச்சை மேற்கொள்ள மகன் வலியுறுத்தல்

webteam

கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன், சிகிச்சையை தொடங்காததால் தனது தாயின் உடல்நிலை நேரம் செல்ல செல்ல மோசமாகி வருவதாக ட்விட்டரில் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததோடு மேலும் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன், சிகிச்சையை தொடங்காததால் தனது தாயின் உடல்நிலை நேரம் செல்ல செல்ல மோசமாகி வருவதாக ட்விட்டரில் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தற்போது எனது அம்மா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் சிக்கலான கட்டத்தில் இருக்கிறார். கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதனால் சிகிச்சையை தொடங்காமல் உள்ளனர். இதனால் அவரின் உடல்நிலை நேரம் செல்ல செல்ல மோசமாகி வருகிறது. தயவுசெய்து எங்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கி சிகிச்சையை தொடங்குங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.