chennai rain pt desk
தமிழ்நாடு

மழை வெள்ளத்தில் தந்தையை தேடிச் சென்ற மகனுக்கு நேர்ந்த பரிதாபம் - பள்ளிக்கரணையில் சோகம்

webteam

மிக்ஜாம் புயல் ஓய்ந்த பின்னும், வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது பள்ளிக்கரணை. கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் வேளையில், காமகோடி நகரில் உள்ள முருகனின் வீடு தற்போது கண்ணீரால் சூழ்ந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

death

வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு வசிந்த வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சமடைந்தனர். அதில் முருகனின் குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கினர். இந்தச் சூழலில் முருகன் எடுத்த ஒரு முடிவுதான் தற்போது அவரது குடும்பத்தையே கண்ணீர் வெள்ளத்தில் தள்ளியுள்ளது. வீட்டை பார்த்து விட்டு வருவதாக சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பரிதவித்துள்ளனர்.

தாயின் வேதனையை தாங்க முடியாத மகன் அருண், தந்தை முருகனை தேடி காமகோடி நகருக்குச் சென்றுள்ளார். அவரும் திரும்பி வராததால் ஒட்டுமொத்த குடும்பமே ஒருவித பயத்தில் ஆழ்ந்துள்ளது. மழை ஓய்ந்து வெள்ளம் மெல்ல வடிந்த நிலையில், முருகனின் மனைவி ரேவதி, மகள் அம்பிகா மற்றும் உறவினர்கள் காமகோடி நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

அப்போது முருகன் மட்டும் வீட்டின் மேல் மாடியில் பாதுகாப்பாக இருந்துள்ளார். அவரிடம் அருண் எங்கே என கேட்டபோதுதான், 2 நாட்களாக அங்கு அவர் வராதது தெரியவந்துள்ளது. பதறிபோன மொத்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தில் அருணை தேடியுள்ளனர்.

chennai rain

எங்கு தேடியும் கிடைக்காததால் கலக்கமடைந்த குடும்பத்தினர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது காமகோடி நகர் பகுதியில் உள்ள முட்புதரில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல் துறையினரும், மீட்பு குழுவினரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த உடலை மீட்டு கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலின் அடையாளங்கள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்தபோது அருணாக இருக்கக்கூடும் என ஐயமுற்றனர்.

காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அச்சத்துடன் வந்த குடும்பத்தினர், உடலைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர். அருணின் உடல்தான் என அவர்கள் கதறி அழுது உறுதிப்படுத்தினர். தந்தையை தேடிவந்த அருண், மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே அருணின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும். தந்தையை தேடி மழை வெள்ளத்தில் சென்ற மகன் உயிரிழந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.