செங்குன்றத்தில் செயின்பறிப்பு கொள்ளையர்களிடமிருந்து போராடி நகையை காப்பாற்றிய பெண்ணை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலையன் புதுநகர் 5வது பாலவினாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி(45). இவர் நேற்றிரவு தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கோமதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். உஷாரான கோமதி, தமது ஒரு கையில் நகையை பத்திரமாக பிடித்துக்கொண்டு கொள்ளையர்களிடம் போராடிக் கொண்டு கத்தினார்.
சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வருவதை பார்த்து கொள்ளையர்கள் நகையை விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நகையை பத்திரமாக பிடித்துகொண்டு மர்மநபர்களிடம் போராடிய பெண் கோமதியை அப்பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டினர்.
அதேபோல் புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்ற ராமலட்சுமி என்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்து சென்ற சம்பவம் அரேங்கேறியுள்ளது. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.