சமூக வலைத்தளங்களில் உள்ள 50 முதல் 65 சதவிகித பதிவுகள் அரசின் கோரிக்கையை ஏற்று நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சைபர் கிரைம் குற்றத்தை தடுக்க சமூக வலைத்தளங்கள் பக்கத்தை அந்த நபரின் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின்படி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய தகவல்களை நீக்கும்படி உரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தகவல் தொடர்புத் துறை கோரிக்கை வைத்தது. அதன்படி ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தமாக 1636 கோரிக்கைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வைக்கப்பட்டது. இவற்றில் சர்ச்சைக்குரிய கருத்தை நீக்க 1093 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 62 சதவிகித சர்ச்சையான பதிவுகளை நீக்கியுள்ளது.
அதேபோல யுடியூப் நிறுவனத்திற்கு 252 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் யுடியூப் நிறுவனம் 131 வீடியோக்களை நீக்கியுள்ளது. மேலும் ட்விட்டர் நிறுவனத்திடம் வைக்கப்பட்ட 15 கோரிக்கைகளில் 8 கருத்துகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தமாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று சமூக வலைத்தளங்களில் கடந்த மாதத்தில் மட்டும் 50 முதல் 65 சதவிகித கருத்துக்களை தங்களது தளத்திலிருந்து அந்நிறுவனங்கள் நீக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.