தமிழ்நாடு

பாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் - பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்

webteam

சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் செய்த சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சேலத்தில் வசிக்கும் சமூக செயற்பட்டாளரான பியூஷ் மனுஷ், ஏரிகள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அவ்வப்போது ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் பேசுவார். அத்துடன் மத்திய அரசின் நியூட்ரினோ, 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிடுவார். 

இந்நிலையில் சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற அவர், அங்கு இருந்தவர்களிடம் சில கேள்விகளை எழுப்பி வாதம் செய்தார். இதனை ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவாகவும் அவர் பதிவிட்டார். அப்போது இருதரப்பினரிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பியூஷ் மனுஷை சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பிய பாஜக அலுவலகத்தில் இருந்தவர்கள், அவரை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டனர். பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பியூஷ் மனுஷ் போன் கீழே விழுந்து, லைவ் வீடியோ நின்றுவிட்டது. 

சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பியூஷ் மனுஷை மீட்டு அழைத்துச்சென்றனர். ஆனால் இதற்கிடையே பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது. காவல்துறையினரின் கண் எதிரிலேயே அவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த பாஜகவினர், பியூஷ் மனுஷ் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் பாஜகவினர் கூறியுள்ளனர்.