தமிழ்நாடு

தமிழ்நாடு: கருப்பு பூஞ்சையால் 2,700 பேர் பாதிப்பு; 148 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு: கருப்பு பூஞ்சையால் 2,700 பேர் பாதிப்பு; 148 பேர் உயிரிழப்பு

JustinDurai

தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 148 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் சிறப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்த இடைக்கால அறிக்கையை முதலமைச்சரிடம் சிறப்பு பணிக்குழு தாக்கல் செய்தது. மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் கருப்பு பூஞ்சை நோய்களை தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை கடந்த மே மாதம் தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் மோகன் காமேஸ்வரன், ''தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய் குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது. 

இதுவரை 148 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பு சதவிகிதம் 6 சதவீதமாக உள்ளது. இடைக்கால அறிக்கையில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளை பெற்றுத் தந்ததன் அடிப்படையில் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஒரிரு வாரங்களில் கருப்புப் பூஞ்சை நோயை முழுமையாக கட்டுப்படுத்திவிடுவோம். 

கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகளவில் உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் உருமாற்றம் அடையாது. மற்ற மாநிலங்களை பார்க்கையில் தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைவுதான்'' என்று அவர் கூறினார். 

- ஸ்டாலின்