மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.நாகராஜன், உதவி அலுவலராக சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆணையம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கும்போது அதிகாரம் இல்லை என எப்படி கூறுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், உதவி தேர்தல் அதிகாரியையும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மதுரை ஆட்சியர், உதவியாளரை மாற்ற உத்தரவிட்ட நிலையில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஆவணங்கள் தாக்கல் செய்தது. அதில், மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.நாகராஜன், உதவி அலுவலராக சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.