Rail pt desk
தமிழ்நாடு

கண்டோன்மென்ட் டூ கடற்கரை: ரயில் பெட்டியில் கிளம்பிய புகை.. அலறியடித்து ஓடிய பயணிகள்... நடந்தது என்ன?

வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலின் கார்டு பெட்டியில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் இறங்கி ஓடினர். இதனால் 20 நிமிடங்கள் ரயில்கள் காலதாமதமாக செல்கின்றன.

webteam

வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் பேசஞ்சர் ரயில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் மற்றும் கடம்பத்தூர் இடையே ரயில் வந்து கொண்டிருந்த போது கார்டு பெட்டியின் அடியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட கார்டு உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் அளித்த நிலையில், ரயில் நிறுத்தப்பட்டது.

வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை - பயணிகள் ரயில்

இந்நிலையில், ரயில் பெட்டியில் இருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள், அலறி அடித்து இறங்கி ஓடினர். இதையடுத்து கார்டு இறங்கி வந்து பார்த்த போது கடைசி பெட்டியின் அடியில் இருக்கும் பிரேக் ஓயிண்டிங் பாக்சில் இருந்து புகை வருவதை கண்டு, ரயில் பெட்டியின் உள்ளே எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “பிரேக் ஓயிண்டிங் பாக்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சக்கரம் சுற்றாமல் நின்று விட்டது. இதனால் சக்கரத்திற்கும் பிரேக்கிற்கும் உராய்வு ஏற்பட்டதால் வந்த புகைதான் இது. தற்போது ரயில் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தனர். இதன் காரணமாக பேசஞ்சர் ரயிலின் பின்னால் வந்த புறநகர் ரயில்கள் அனைத்தும் 20 நிமிடங்கள் காலதாமதமாக செல்கின்றன.