தமிழ்நாடு

"சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி" - தமிழக அரசு !

jagadeesh

கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்கள் அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லை அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும். ஜூலை 6முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலுகைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஜூலை 6-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும். ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் இருக்கும்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல்
கடைபிடிக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.