தமிழ்நாடு

நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது‌ !

நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது‌ !

webteam

நெல்லையிலிருந்து கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை அண்டை மாநிலங்களுக்கு திருட்டுத்தனமாக கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சாலை வழியான போக்குவரத்தில் அரிசிகளை கடத்துவது சிறிது சிரமமான விஷயம் என்பதால் பெரும்பாலும் கடத்தல்காரர்கள் ரயில்வே போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.

நெல்லை, குமரி போன்ற தென் மாவட்டங்களில் அடிக்கடி ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறைவான விலையில் மலிவாக கிடைப்பதால் கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்கின்றனர். இதை தடுப்பதற்கு காவல்துறை, வருவாய்துறை போன்றவை தனிப்படை அமைத்து செயல்பட்டாலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 

இந்நிலையில் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சந்திப்பில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகப்படும்படி நடைமேடையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நெல்லையில் இருந்து கேரளா வழியாக பிலாஸ்பூர் ரயில் மூலம் பழக்கூடைகளில் மறைத்து வைத்து ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தாலும் கடத்தல்காரர்கள் ஒன்றும் தெரியாததுபோல் தப்பிவிடுவார்கள். ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆறு பெண்களை போலீசார் தீவர விசாரணை செய்து வருகின்றனர்.