Tragic decision pt desk
தமிழ்நாடு

சிவகாசி: கடன் பிரச்னையால் வீடியோ பதிவிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர் எடுத்த விபரீத முடிவு!

webteam

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி காலனியை சேர்ந்தவர் சப்பாணி முத்தையா (25). இவர், சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

சப்பாணி முத்தையா தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டியை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

GH Sivakasi

அப்போது அவரது தாயார் பெருமாள் அம்மாளை வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனுக்கு வட்டியை செலுத்த கூறியுள்ளார். இதற்கு பெருமாள் அம்மாள் மறுத்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சப்பாணி முத்தையா அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள் அம்மாள் திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூய்மை பணியாளர் சப்பாணி முத்தையா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை. வாழ விரும்பினாலும் கடன் பிரச்னையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அழுதபடி பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.