தமிழ்நாடு

சிவாஜி மணிமண்டபம் திறப்பு: ஒபிஎஸ், ரஜினி, கமல் பங்கேற்பு

webteam

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளான இன்று, அவரது மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. 2,124 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்திற்கு நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் நடுவில் சென்னை மெரினா கடற்கரையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் இன்று திறக்கப்பட்டது. தமிழக துணை முதலமைச்சர், ஓ. பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஷால், விக்ரம் பிரபு, கார்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மணிமண்டப திறப்பிற்குப் பிறகு சிவாஜியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அனைவரும், அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்பட தொகுப்புகளையும் பார்வையிட்டனர்.