சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் சாதிய மோதலில் மூவர் உயிரிழந்த வழக்கில் பெண் உள்பட 9 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதே சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். பல வீடுகள் சூறையாடப்பட்டன. கோவில் திருவிழாவின்போது பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை அளிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
இதுதொடர்பாக பழையனூர் காவல்துறையினர் சுமந்த், அருண், சந்திரகுமார், மீனாட்சி, இளையராஜா உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிவகங்கை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2018, அக்டோபர் 31ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கருப்பு ராஜா என்ற முனியாண்டி சாமி, இளையராஜா, கனீத் என்ற கனீத்குமார், அக்னி என்ற அக்னி ராஜ், ஒட்டகுலத்தான் என்ற கந்தசாமி, மாயசாமி, ராமகிருஷ்ணன், கருப்பையா, செல்வி உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறோம். வழக்கின் விசாரணை முடிந்து விட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எங்களை இனிமேல் நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், “3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தற்போது வரை அந்த பகுதி ஒரு வித பதட்டத்துடனே காணப்படுகிறது. தற்போது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. கூடுதலாக பலரை விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். மேலும் தற்போது மருதுபாண்டியர் குருபூஜை, தேவர்ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவதால் பதட்டம் நிறைந்த பகுதியாகவே சிவகங்கை மாவட்டம் காணப்படுகிறது. ஆகவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என தெரிவித்தார்.
அதேபோல இந்த வழக்கின் புகார்தாரர் ஆன மகேஸ்வரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங், “வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இருப்பினும் குற்றவாளிகள் சம்மன் பெறாமல், ஆஜராகாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றன. தற்போது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் மிரட்டப்படும் வாய்ப்பும், சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால், விசாரணையும் பாதிக்கப்படும். ஆகவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என தெரிவித்தார்.
இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி பார்த்திபன், “இது ஒரு அரிய வழக்கு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டி சதிசெய்து திட்டமிடப்பட்டு நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவம் இது. ஒரு கிராமத்தினர் மீது உயிர் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட தாக்குதல். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தனிப்பட்ட பங்கை கருத்தில் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த பாதிப்பையே கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று பேரின் உயிரிழப்பு மற்றும் ஐவரின் படுகாயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது” என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.