சிவதாஸ் மீனா pt desk
தமிழ்நாடு

“நீலகிரி சுற்றுலா: எளியமுறையில் இ-பாஸ்; வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை” - சிவதாஸ் மீனா பேட்டி

“எளிய நடைமுறையை பயன்படுத்தி இ-பாஸ் வழங்குவதால் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம். வியாபாரிகள் அச்சமடையத் தேவையில்லை” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: இரா.சரவணபாபு

நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் உள்ளதா என்பதை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, சோதனை செய்த பின்பே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று உதகையில் மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம் என்பதால் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

e pass system

இதற்காக உதகை செல்ல மேட்டுப்பாளையம் வந்த தலைமைச் செயலாளர், கல்லார் பகுதியில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அமைக்கப்படுள்ள சோதனை சாவடியை நேரில் ஆய்வு செய்தார். சுற்றுலா பயணங்களுக்கு எளிதில் இ-பாஸ் கிடைக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும், வாகன நெரிசல் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இருந்த கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில்... "இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தாமதமுமின்றி எளிமையாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திடீரென சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் கூட எளிதில் இந்த இ-பாஸை பதிவு செய்யும் அளவுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம்"

E Pass system

இந்த இ-பாஸ் நடைமுறைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "இ பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக யாரிடமும் அப்ரூவல் பெற வேண்டியதில்லை. சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே உடனடியாக அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறையாது.

துவக்க காலத்தில் வியாரிகள் அடைந்த அச்சம் தற்போது விலகியுள்ளது" என்றார். மேலும் கோடை காலத்தில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை கணக்கிடவே இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.