தமிழ்நாடு

‘கஜா’ பாதிப்புக்கு சிவகார்த்திகேயன் 20 லட்சம் உதவி

‘கஜா’ பாதிப்புக்கு சிவகார்த்திகேயன் 20 லட்சம் உதவி

rajakannan

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ‘கஜா’ புயலுக்கு ரூ.10 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். அதேபோல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தனது ரசிகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அனுப்பினார். 

நாகப்பட்டினம் எம்.எல்.ஏவும், மனிதநேர ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி தனது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அறிவித்துள்ளார். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருநாள் ஊதியம் நிதியாக வழங்கப்படும் என தலைமைச் செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு 2 லாரிகளில் நிவாரணப் பொருட்களை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் அனுப்பினார்.

முன்னதாக, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாயும், நடிகர் விஜய் சேது ரூ25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்து இருந்தனர். திமுக சார்பில் ரூ1 கோடி, அக்கட்சி எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளமும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், சிறிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ‘கஜா’ புயல் பாதிப்பால், பாடப்புத்தகங்கள் சேதமடைந்த, புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒருவார காலத்திற்குள் பாடநூல்கள் வழங்கப்படுவதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து மத்திய அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நடிகர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, நாகையில் தலைமுறைக்கு பேட்டி அளித்த பேரிடர் கால சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, புயல் பாதித்த மாவட்டங்களில் சேத கணக்கெடுப்பு பணி முடிவடைய 15 நாட்களாகும் எனக் கூறியுள்ளார்.