தமிழ்நாடு

ப்ளாஸ்டிக் தடை ஒப்புக்குத்தானா? - மீண்டும் பெருகும் மக்காத குப்பைகள்

ப்ளாஸ்டிக் தடை ஒப்புக்குத்தானா? - மீண்டும் பெருகும் மக்காத குப்பைகள்

webteam

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கள்ளச்சந்தை மூலம் நெகிழிப் பொருள்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சட்டபேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நெகிழித் தடை‌ அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார். மறுசுழற்சி செய்ய முடியாத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களான பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 14 பொருள்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு நெகிழி தயாரிக்கும் தொழிற்சாலைகள்,சிறு குறு வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 

இருப்பினும் நெகிழியின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் தடையை மீறி பயன்படுத்தப்பட்ட பல டன் எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் கள்ளச்சந்தை மூலம் மீண்டும் நெகிழி, பயன்பாட்டுக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சமூக 
ஆர்வலர்கள், “நெகிழிப் பொருள் தடை அமலுக்கு வந்த பிறகும் முழுமையாகத் தடைசெய்யப்படவில்லை. அதற்கான மாற்றுப் பொருளும் போதுமான அளவு இல்லாததால் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன” எனத்  தெரிவிக்கின்றனர்.