MeToo இயக்கத்தின் மூலம் பெண்கள் பலரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றன. தமிழகத்தில் வைரமுத்து மீது பாடகி சின்மயி ட்விட்டரில் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது. சின்மயின் புகாரை வைரமுத்து நிராகரித்தார். வேண்டுமென்றே தன்னுடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடப்பதாக கூறியிருந்தார். இதனிடையே, சின்மயி தன் மீதான புகார் குறித்து தொடர்ச்சியாக ஊடகங்களிடமும் விளக்கம் அளித்து வந்தார்.
இந்நிலையில், பாடகி சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சின்மயி உள்ளிட்டோருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
சின்மயி பேசுகையில், “ஒட்டுமொத்த ஆண்டாள் சர்ச்சையில் நான் ஒரு ட்விட் கூட செய்யவில்லை. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. இது என் பிரச்னை, எனக்கு நடந்தது. மற்றவர்கள் அரசியல் செய்தால், நான் என்ன செய்ய முடியும்? ஒரு பாஜக அமைச்சர் மீதே குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அவர் ராஜினாமாவே செய்துவிட்டார். அப்படியிருக்கையில் என்னை எப்படி பாஜகவின் ஆதரவாளர் என்று கூறுகிறீர்கள்? என் மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்.
Read Also -> “துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது” - கமல்ஹாசன்
இதில் இடது, வலது, மையம் என எல்லா அரசியல் கட்சி தரப்பில் உள்ள ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். கடவுள் நம்பிக்கை உடையவர், இல்லாதவர், பத்திரிகையாளர், அமைச்சர், கார்பரேட் என எல்லா தரப்பில் உள்ளவர்கள் பெயரும் இதில் அடிபட்டுள்ளது.
பெண்களுக்கு என்று உள்ள பிரச்னையை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக வருபரை எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கலாம் என்று பார்க்கிறார்கள். எங்களுக்கு ஆதரவாக மீ டூ இயக்கம் வந்துள்ளது. அதனால், இனி கேள்வி மேல், கேள்வி கேட்போம்” என்று கூறினார்.