சிங்காரச் சென்னை திட்டம் மீண்டும் உயிர்பெறுகிறது. சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் பணிகளை தொடங்க மாநகராட்சி முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன் சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோது மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டம்தான் சிங்காரச் சென்னை. அதற்கு தற்போது சிங்காரச் சென்னை 2.0 என்ற பெயரில் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது, மாநகராட்சி. இத்திட்டத்தின் கீழ் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், சென்னை மாநகரை அழகாக மாற்றும் வகையில் வித்தியாசமான அம்சங்களுடன் வகுக்கப்பட்டுள்ளது சிங்கார சென்னை 2.0 திட்டம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் நகர்ப்புற இடங்களை தேர்வு செய்து புனரமைத்தல், நகர் அழகுபடுத்துதல் திட்டம், புராதன கட்டடங்களை புனரமைத்தல் கலை கலாசார மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டிற்கு முக்கியத்துவம், போக்குவரத்து பயன்பாடு, மக்களின் பயணங்களை எளிதாக்குதல், மக்கள் மாநகராட்சியை எளிதாக அணுகுதல், E - governance என பல்வேறு வகையாக பணிகளை உள்ளடக்கி சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் Project Blue என்ற பெயரில் சென்னை கடற்கரை பகுதிகளை தேர்ந்தெடுத்து அழகாக்குதல், நீர் விளையாட்டுகளை உருவாக்குதல், கடலுக்கு அடியில் நீர் அருங்காட்சியகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பயோராக் டெக்னாலஜி மூலம் கடற்கரை பகுதிகள் சீரமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த Smart Class Rooms, சென்னை மாநகராட்சிக்கென பிரத்யேக ரேடியா சேனல், பாண்டி பஜாரை போன்று ஆயிரம் விளக்கு காதர் நவாஸ் கான் சாலை பெடஸ்டிரியன் பிளாசாவாக மாற்றம், 7 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் பகுதி புனரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், 10 கோடியில் கிண்டி ரயில் நிலைய பகுதி அழகாக்குதல், இடுகாடுகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துதல், மேம்பாலங்களில் வெர்டிக்கல் கார்டன், பாலத்திற்கு கீழ் உள்ள பகுதிகளை மக்கள் அமர்ந்து பேசுவதற்கான பகுதிகளாக உருமாற்றம் செய்தல், சைக்கிள் வே, சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவை புதுபொலிவுடன் சீரமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அத்துடன் பொறியியல், அறிவியல், கணித பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. செல்ல பிராணிகளுக்கான பிரத்யேக பூங்காக்களும் இத்திட்டத்தில் அடக்கம். சென்னை மாநகரை சர்வேதச தரத்திற்கு உயர்த்த வகுக்கப்பட்டுள்ள சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஒரு வருடத்திற்குள் முன்னேற்பாடுகளை முடித்து பணிகளை முழுவீச்சில் தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.