கிராமமக்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

சிக்னல் இல்லாமல் சிக்கலில் பரிதவிக்கும் சிலம்பகோன்பட்டி கிராம மக்கள்!

தகவல் தொழில்நுட்பங்கள், ஒவ்வொரு நாளும் வளர்ச்சி காண்பதால், உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், தகவல் தொழில்நுட்பத்தின் பலனை இன்னும் அனுபவிக்காமலேயே இருக்கிறது. இதன் பின்னணியைப் பார்க்கலாம்...

PT WEB

மதுரை மாவட்டத்தில், மேலூர் அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது சிலம்பகோன்பட்டி. 500- க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமம், மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அழகாக காட்சி தருகிறது.

இயற்கையோடு இணைந்திருப்பதை ரசிக்கும் அதே நேரத்தில், சிலம்பகோன்பட்டி கிராமம், நவீன காலத்திற்குள் இன்னும் வரவில்லை என்ற வேதனை செய்தியும் கிடைக்கிறது. மலைகள் சூழ்ந்திருப்பதால், இந்த கிராமத்தில் அலைபேசிக்கான சிக்னல் கிடைக்கவில்லை. இதற்காக, ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஓர் புளியமரத்தடியில் திரள்கிறார்கள் கிராம மக்கள்.

சிக்னலுக்காக புளியமரத்தடிக்குச் செல்வது சிலம்பகோன்பட்டியில் வழக்கமான ஒன்றுதான். செல்போன் சிக்னல் பிரச்னையால், அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸை அழைப்பதிலும், பிள்ளைகளின் படிப்புக்கான தேவைகளுக்கும், நூறு நாள் வேலைத்திட்ட பதிவிலும், கடும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள் கிராம மக்கள்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தகலைச்செல்வி, என்பவர் பேசும் பொழுது, "108 ஆம்புலன்ஸை அழைப்பதற்குக் கூட 3 கி.மீ. செல்லும் நிலை இருக்கிறது. உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. செல்போன் டவர் இல்லாததால் நூறு நாள் வேலைக்கான பதிவுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது” என்கிறார்.

வடிவேலு என்பவர் பேசுகையில், “பள்ளிக்குழந்தைகளின் ஆன்லைன் பாடங்களை பார்க்க சிரமமாக உள்ளது. மலைகள் சூழ்ந்த ஊர் என்பதால் விஷக்கடி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. டவர் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது” என்கிறார்.

செல்போன் டவரை எதிர்பார்த்து காத்திருக்கும் சிலம்பகோன்பட்டியில், தந்தி வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டவர் மட்டும் பயன்பாடின்றி, காட்சிப்பொருளாக நிற்கிறது. வங்கி மற்றும் அரசின் சேவைகளுக்காக இணையத்தில் விண்ணப்பிக்கும்போது, கடவுச்சொற்கள் கிடைப்பதில் கூட சிக்கல்களை சந்திப்பதாக கூறுகின்றனர் கிராம மக்கள்.

தங்கள் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லைஎன்பது அவர்களின் வேதனை. சிலம்பகோன்பட்டியில் நிலவும் சிக்னல் பிரச்னை குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள், பிரச்னைக்குத் தீர்வு காண அங்கு செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்.