திருவள்ளூர் மாவட்டம் முகநூல்
தமிழ்நாடு

சிகிச்சை பார்ப்பது போல வந்து வெறிச்செயல்.. சென்னையில் உறைய வைத்த இரட்டை கொலை.. சிக்கிய செல்போன்!

PT WEB

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சித்த மருத்துவர், அவரது மனைவி கொல்லப்பட்ட வழக்கில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் சிவன்நாயர் என்பவர், மனைவி பிரசன்னா குமாரியுடன் வசித்து வந்தார். இருவரும் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். சிவன்நாயர் ஓய்வுபெற்ற ராணுவ வீரராவார். பிரசன்னா குமாரி மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சிவன்நாயர், வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மகன் ஹரி ஓம் ஸ்ரீ, அண்ணனூரில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.மகள் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை, மகன் வெளியே சென்றிருந்த வேளையில் சிகிச்சை பார்ப்பது போல வந்தவர்கள், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலையடுத்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், இருவரின் உடல்களையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களையும் சேகரித்தனர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரடியாக பார்வையிட்டு கொலையாளிகளை துரிதமாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றவர்கள், வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா என்றும், குடும்பத்தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலை நடைப்பெற்ற இடத்தில் செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் மகேஷ் என்பவரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதியில் நடந்த இரட்டை கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே பகுதியில் கடந்த வாரம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கணவன் மனைவி வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.