தமிழ்நாடு

“எங்களை விட சுபஸ்ரீயை கடவுள் அதிகம் நேசித்துவிட்டார்” - அலுவலக நண்பர்கள் உருக்கம்

webteam

பேனரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் அலுவலக நண்பர் ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்விட்டரில் ‘#WhoKilledShubashree’, #BannerKilledShubashree ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியிருக்கின்றன. இதில் #WhoKilledShubashree என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி அன்பழகன் சேகர் என்ற நபர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘சுபஸ்ரீ எனது அலுவலக நண்பர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சுபஸ்ரீயின் இருக்கை மற்றும் கணினியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.