தமிழ்நாடு

ஆக.31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

webteam

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கடந்த ஜூலை 14ஆம் தேதி நீதிபதி ரவிசந்திர பாபு ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமமோகன ராவ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, 85 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் அராசணை விவகாரத்தில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், தமிழக அரசின் அரசாணை செல்லாது எனவும் அதிரடி தீர்ப்பளித்தது. 

மேலும், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம்‌ அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்திருந்தால் அகில இந்திய அளவில் போட்டிபோடும் அளவிற்கு மாணவர்களின் திறமை மேம்பட்டிருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், காலம் தாழ்த்துவதை கைவிட்டு மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அதனை முடிக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.