நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து, சுகாதாரத் துணை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரம்மானந்தகுமார். இவரது அவரது மனைவி மாலினி. கடந்த சனிக்கிழமை 2-ஆவது பிரசவத்திற்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை ஈன்ற மாலினிக்கு சில மணி நேரங்களிலேயே அதிக உதிரப்போக்கும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
பணியில் மருத்துவர் இல்லாததால், செவிலியே மாலினியை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது. ஆம்புலன்ஸில் போதிய ஆக்சிஜன் இல்லாததால் மாலினி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரது தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மாலியின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் இது தொடர்பாக மனு அளித்தனர். அதனைதொடர்ந்து வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, உரிய விசாரணை நடத்தி மாலினி பாதிக்கப்பட்டது போல் வேறு யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.