தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை பெண்கள், பள்ளி மாணவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவமனையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் வலியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “ தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அமைதி திரும்புவதற்கு ஏற்ப காவல்துறையினரின் எண்ணிக்கை தூத்துக்குடியில் குறைக்கப்படும். அமைதி திரும்ப வணிகர்களும் ஒத்துழைப்பு நல்குகின்றனர்” என தெரிவித்தார்.