மாணவியை தாக்கிய வாலிபால் பயிற்சியாளர் pt desk
தமிழ்நாடு

ஓசூர்: ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக மாணவியை தாக்கிய வாலிபால் பயிற்சியாளர்! #ShockingVideo

ஓசூர் அருகே ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக மாணவியை தாக்கியுள்ளார் வாலிபால் பயிற்சியாளர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளது. இதில், ஓசூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர். அப்போது, தனியார் பள்ளி ஆசிரியையின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி ஒருவர் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவியை தாக்கிய வாலிபால் பயிற்சியாளர்

இதில் கைக்கடிகாரத்தை இழந்த அந்த ஆசிரியை, அந்த மாணவியையும் அவர்களது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு பயிற்சியாளர் புதிய கைக்கடிகாரத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், சமாதானம் ஆகாத அந்த ஆசிரியை தொடர்ந்து மாணவியை திட்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளர் மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அத்துடன் இல்லாமல், அந்த மாணவியை பொதுவெளியிலேயே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், அவர் தவறே செய்திருந்தாலும், அதற்கு தண்டனை வன்முறையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய இடத்திலுள்ள ஆசிரியர்களை வழிநடத்தவே இங்கே வழிமுறைகள் தேவைப்படுகின்றன என்பதையே இச்சம்பவம் காட்டுவதாக, குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.