தமிழ்நாடு

`பாலியல் புகாரளிக்க காவல்நிலையம் சென்ற என் சகோதரியை...’-ஆட்கொணர்வு மனுவால் வெளிவந்த உண்மை!

`பாலியல் புகாரளிக்க காவல்நிலையம் சென்ற என் சகோதரியை...’-ஆட்கொணர்வு மனுவால் வெளிவந்த உண்மை!

webteam

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்று காப்பகத்தில் வைத்திருக்கும் நிலையில், அவரை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி அவரது சகோதரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாமணி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் ஒரு ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் "எனது தங்கை கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்துவிட்டு நத்தத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி  தேவாலயத்திற்கு செல்ல் சத்திரப்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்ற போது 5 மர்ம நபர்கள் காரில் வந்து எனது தங்கையை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கோரி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் இரண்டு சவரன் தங்க நகையையும் பறித்துக் கொண்டு வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்த போது, அதனை ஏற்காமல் நத்தம் காவல் நிலையத்திற்கும் அவர்கள் அங்கிருந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி தொடர்ச்சியாக எனது தங்கையை அலைக்கழித்தனர். எனது தங்கையின் புகாரையும் ஏற்கவில்லை.

இதனை தொடர்ந்து தென் மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது எனது தங்கை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். எனது தங்கையை சந்திப்பதற்காக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பார்க்க விடாமல் தடுத்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்துச் சென்ற எனது தங்கையை பார்க்க விடாமல் செய்வது சட்ட விரோதமானது. எனவே எனது தங்கையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் அவரை அவரது விருப்பத்தின் பேரில் அவரது சகோதரியுடன் செல்ல அனுமதித்ததனர்.

நீதிமதிகள் தரப்பில், “ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு குறித்து புகார் கொடுத்தால் அதன் பேரில் வழக்கு பதிவு செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக அலைகளைக்கப்பட்டுள்ளார். 20 நாட்களாக வழக்கு பதிவு செய்யாதது ஏன்?” என காவல்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து தென்மண்டல காவல்துறை தலைவர் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.