செய்தியாளர்: மருதுபாண்டி
சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டது. அப்போது அதில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் 7 மாத கர்ப்பிணி மனைவி கஸ்தூரி தன் குடும்பத்தினரோடு பயணம் செய்துள்ளார்.
நேற்றிரவு ரயில், விருதாச்சலம் பூவனூர் அருகே வந்து போது வாந்தி எடுப்பதற்காக கதவின் அருகே கர்ப்பிணி பெண் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ரயில் பயணத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் புதிய தலைமுறை நெல்லை செய்தியாளர் மருதுபாண்டி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்.டி.ஐ. பதில் இங்கே...
01-01-2020 முதல் 15-02-2024 வரை (50 மாதம்) எத்தனை பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர் என்ற கேள்விக்கு, திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 24 ரயில்வே காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 50 மாதங்களில்...
2020 - 06
2021 - 04
2022 - 18
2023 - 42
2024 - 17 (15-02-2024 வரை)
என மொத்தம் 87 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கடந்த 2023 ஆம் ஆண்டு 42 பேர் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி ரயில் பயணத்தின் போது உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50 மாதங்களில் 91 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.