தமிழ்நாடு

களைகட்டிய சிவராத்திரி: சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு!

களைகட்டிய சிவராத்திரி: சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு!

webteam

மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோயில்களில் நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

ஆடல் அரசரான சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் தில்லையம்பலத்தில் மகா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நடராஜரை வழிபட்டனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள், பரதநாட்டியம் ஆடி ஈஸ்வரருக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர்.

தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற பெருவுடையார் கோயிலிலும் மகா சிவராத்திரி கொண்டாட்டம் களைகட்டியது. அண்மையில் குடமுழுக்கு நடத்தப்பட்ட இக்கோயில், அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவராத்திரியையொட்டி பெருவுடையாருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

மேலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நெல்லையில் உள்ள பழமையான நெல்லையப்பர் கோயிலில் மகாசிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவராத்திரிக்கு முந்தைய தினம் தொடங்‌கிய இந்த ஆன்மிக ஓட்டம், சிவராத்திரி இரவில் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவு பெற்றது.

புதுச்சேரியில் கருவடிக்குப்பம் குருசித்தானந்தா கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவலிங்கத்துக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன. மேலும், கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலியும் நடத்தப்பட்டது.
சென்னையிலும் மகா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள பழமையான கபாலீஸ்வரர் கோயிலில் இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் பாடல்களைப் பாடி சிவபெருமானை வழிபட்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரமாண்டமான விழா நடத்தப்பட்டது. அங்கு 112 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை முன்பு விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவின் ஒருகட்டமாக, நாட்டு மாடுகள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. மாடுகளுக்கு கோபூஜை நடத்தப்பட்டது. தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் மகா சிவராத்திரி விழா தொடங்கியது.

குடியரசு துணைத்‌ தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேனி எம்பி ரவீந்திரநாத் குமார், நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜக்கி வாசுதேவ் எழுதிய புத்தகத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டார். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, அனைவரும் தாய் மொழியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.