தமிழ்நாடு

சிவாஜி சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம்: உயர்நீதிமன்றம்

சிவாஜி சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம்: உயர்நீதிமன்றம்

webteam

சிவாஜி சிலையை கடற்கரை சாலையிலிருந்து அகற்றி மணிமண்டபத்தில் வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா சிவாஜி சிலை தொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி சிலை மெரினா சாலையோரத்தில் நிறுவப்‌பட்டால் அனைவரும் பார்க்கும் வகையிலும், அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சிவாஜியை கவுரவித்த‌ நிலையில், அவர் பிறந்த தமிழகத்தில் அவருக்கு மரியாதை மறுக்கப்படுகிறது என்று  என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. தமிழகத்தில் சாலையோரங்களில் 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாக அரசே தெரிவித்த நிலையில், சிவாஜி சிலையை ஏன் மெரினாவில் நிறுவக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அனைத்து சிலைகளையும் மெரினா‌வில் நிறுவினால், மெரினாவிற்குள் நுழையக்கூட முடியாது. சிலைகளை நிறுவுவது, அகற்றுவது போன்றவற்றைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியமானது. எனவே அரசு ‌எடுத்த முடிவின்படி காமராசர் சாலையின் நடுவே உள்ள சிவாஜி சிலையை அகற்றி அடையாறில் கட்டப்படும் மணிமண்டபத்தில் நிறுவலாம். அதேநேரம், சிவாஜியின் நி‌னைவு நாளான ஜூலை 21ஆம் தேதி ‌மட்டும் சிலையை அகற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.