சேகர்பாபு pt web
தமிழ்நாடு

"மோதல்போக்கு வேண்டாம் என்பதற்காக.." - கனகசபை விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய கருத்து

Angeshwar G

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடையாணை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Minister Sekarbabu

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருக்கோயில்களில் அன்னப்பிரசாதம் எனும் நிகழ்வு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தொடங்கப்பட்டது. 15 திருக்கோயில்களில் இந்த அன்னப்பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக 5 கோவில்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 20 திருக்கோயில்களில் அன்னப்பிரசாத திட்டத்திற்கு ஆண்டு தோறும் ரூ.25 கோடி ரூபாய் செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாள்முழுவதும் அன்னதானம் திட்டம் ஏற்கனவே 2 கோயில்களில் இருந்த நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திருவண்ணாமலை, திருச்செந்தூர் உட்பட மேலும் 6 கோயில்களில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டு 8 திருக்கோயில்களில் அத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்தாண்டிற்கான இந்து சமய மானியக்கோரிக்கையில் மேலும் 3 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. முதல்வர் வெகு விரைவில் 3 கோயில்களில் இத்திட்டத்தை தொடங்க உள்ளார். நாள்முழுவதும் அன்னதானம் திட்டத்தால் நாள் ஒன்றுக்கு 92 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகிறார்கள். இத்திட்டத்திற்கு ஆகும் செலவு ரூ.100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

தைப்பூசம் திருநாளின் போது 2 லட்சம் பக்தர்களுக்கு முழுமையாக அன்னதானம் அளிக்கும் நிகழ்வும் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகே தொடங்கப்பட்டுள்ளது. பழனியாண்டவர் திருக்கோவில் நிர்வாகத்திலே உள்ள கல்லூரிகளில், பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியை அறிமுகப்படுத்தி தினம்தோறும் நான்காயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக திருக்கோயில்களில் பக்திப்பசியோடு வருகிற பக்தர்களுக்கு வயிற்றுப்பசி இருக்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் தமிழக திருக்கோவில்களில் அறிவித்துள்ள இந்த அன்னதான திட்டம் என்பது, அன்னதான பிரபு என முதல்வரை அழைக்கும் அளவிற்கு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி துறைசார்ந்த 2 துணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்களும், தொல்லியல் துறையை சேர்ந்த 3 பேர் இணைந்து குழுவாக சென்று முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். 30க்கும் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு முறையாக ஆய்வு செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் என்னென்ன விதிமீறல்கள் இருக்கிறது என்பதை சமர்பிக்க இருக்கிறோம்.

கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்வதற்கு நீதிமன்றத்தில் தடையாணை கேட்டார்கள். நீதிமன்றத்தில் எவ்விதமான தடையாணையும் தரவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர்களது விருப்பத்திற்கேற்ப 4 நாட்கள் ஆருத்ரா தரிசனத்தை காரணம் காட்டி கனகசபையின் மீது அவர்களைத் தவிர பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதற்கு தடை விதித்திருந்தார்கள். மோதல்போக்கு வேண்டாம் என்பதற்காக முறையாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவு மீறிய அவமதிப்பு வழக்கு தொடரவும் உள்ளோம். நடந்தவைகளை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது” என தெரிவித்தார்.