விபத்தில் மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவன் சங்கர் விக்னேஷின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த சிங்காரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமியின் மகன் சங்கர் விக்னேஷ். 12ஆம் வகுப்பு பயின்று வரும் இவர் கடந்த 25.08.2018 அன்று மாலை பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் மோதியதில் விக்னேஷ் நிலை தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்குள்ளானார். உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மறுநாள் அதிகாலை மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மேற்கொண்ட வந்த நிலையில் இன்று மூளைச்சாவு அடைந்தார்.
மருத்துவமனையின் மூளை நரம்பியல் மருத்துவர் பரிந்துரையின்படி மூளை செயல்பாடுகளுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில் மூளை நிரந்தரமாக செயல் இழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மூளைசெயல் இழந்து இருந்தாலும் மற்ற பாகங்களான சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் விக்னேஷ் நிலையினை அவரது தந்தையிடம் மருத்துவ குழுவினர் எடுத்துக் கூறினர். நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கும் சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரலை உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு கொடுக்கலாம் எனத் தெரிவித்தனர். தனது மகன் இறந்து விட்டாலும் அவரின் உறுப்புகள் 4 பேரின் உடல்களில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என மனநிறைவுடன் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டனர். உடனே தொலைபேசி, பேக்ஸ் மூலம் அரசுக்கு அனுமதி கோரப்பட்டு துரிதமான நேரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளித்தது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்கள் தலைமையில் சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டருக்கும், நுரையீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடலுறுப்புகளை தானம் செய்து மறுவாழ்வு கொடுப்பது ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.