தமிழ்நாடு

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு

Rasus

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

இந்த ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டிதுரை அவரது உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்னா குமார் ஆகியோர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை சின்னசாமி உள்பட 8 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 11-ஆவது குற்றவாளியான மணிகண்டன் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஆவர்.

முன்னதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 8 பேரும், உணர்ச்சிவசப்பட்டு இந்த செயலை செய்தததால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டனர். ஆனால் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.