தமிழ்நாடு

பொள்ளாச்சியை அடுத்து பெரம்பலூரிலும் பாலியல் கொடூர சம்பவம்

பொள்ளாச்சியை அடுத்து பெரம்பலூரிலும் பாலியல் கொடூர சம்பவம்

webteam

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்று பெரம்பலூரிலும் பெண்களை ஆசைவார்த்தை கூறி ஆபாச புகைப்படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதாக அதிக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. கல்லூரி மாணவிகளையும் இளம் பெண்களையும் ஆசை வார்த்தை கூறி வீடியோ எடுத்து கூட்டு பாலியல் செய்த சம்பவம் பொள்ளாச்சியை மட்டுமல்ல தமிழகத்தையே அதிரச்செய்தது. அதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் உடந்தையாக இருந்தனர் என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரம்பலூரில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு நெருக்கமானவர்கள், கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச வீடியோ எடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக அதிர்ச்சி தரும் புகார் எழுந்துள்ளது. ஆளூம் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தன்னிடம் வேலைக்காக சிபாரிசுக்கு வரும் பெண்களை, அவரது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார் என்று வழக்கறிஞர் அருள் என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். வீடியோ எடுத்த ஆளும்கட்சி பிரமுகருக்கு நெருக்கமான நபர் பெண்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபட்டுள்ளார் என்றும், இதனால் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனியார் நட்சத்திர விடுதிக்கு கல்லூரி மாணவிகளை வரவழைத்து வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் வண்புணர்வு செய்ததாகவும் வழக்கறிஞரின் புகாரில் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்க வந்த போது, அவரிடம் புகாரை வாங்க மறுத்து  குற்றஞ்சாட்டப்பட்டவரிடமே அந்த பெண்ணை அழைத்து சென்று பேரம் பேசி மிரட்டிதாகவும் வழக்கறிஞர் அருள் கூறுகிறார். இதனால் இவ்விவகாரத்தை முறையாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்  விசாரணை வரும் போது பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களின் பெயரை வெளிபடுத்தக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் மனு மற்றும் இது தொடர்பான செய்திகள் அனைத்தும் இணையதளத்தில் தற்போது வெளியாகி பெரம்பலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகார் தொடர்பாக ஏடிஎஸ்பி ரங்கராஜிடம் புதியதலைமுறை கேட்டதற்கு சட்ட விதிகளை காரணம் காட்டி பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமிட்டலும் நேரில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரும் மறுத்து விட்டார். பெரம்பலூர் முழுவதும் கனலாய் தகித்துக் கொண்டிருக்கும் இந்த கூட்டு பாலியல் வண்புணர்வு சம்பவம் குறித்து காவல்துறை ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்றுவதாக பொதுமக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். மேலும் புகாரில் கூறப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.