Trichy NIT Student Protest PT Web
தமிழ்நாடு

திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! மாணவர்கள் போராட்டம்!

திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் அருகே அமைத்துள்ள என்ஐடி (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ ,மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியை பயின்று வருகின்றனர்.

இதனால், கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள் எடுத்துத் தங்கியும் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில்தான், NIT கல்லூரியின் மகளிர் விடுதிக்கு wifi பிரச்சனையை சரி செய்வதற்காக 5 ஒப்பந்த ஊழியர்கள் வந்துள்ளனர்.

அப்போது, அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஒப்பந்த ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பியோடி, சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த எலக்ட்ரீஷனை கைது செய்துள்ளனர். மேலும், திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்தும் சக மாணவ, மாணவிகள் விடுதியின் முன் திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்ஐடி இயக்குனர் இல்லத்தின் வெளியே அமர்ந்து, ‘இயக்குனர் எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த ஏடிஎஸ்பி கோபால் மற்றும் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் துவாக்குடி போலீசார் சம்பந்தப்பட்ட மாணவ மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், என்ஐடி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுதி அறையிலேயே பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது குறித்து பல்வேறு கேள்விகளை மாணவர்கள் முன்வைக்கின்றனர்.

கேள்விகள்:

  • அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியை தரக்குறைவாகவும் நடத்தியதாக ஆதங்கம்.

  • காவல்நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட மாணவியின் ஆடை குறித்து வார்டன் விமர்சனம் செய்துள்ளார்.

  • “ இப்படி ஆடை அணிந்தால் அப்படித்தான் நடக்கும் என்ற ரீதியில் வார்டன் பேசியதாக மாணவிகள் அதிப்தி தெரிவித்துள்ளனர்.

ஆக..விடுதி காப்பாளர்களின் பணி என்ன? மாணவிகள் அறையில் இருக்கும் போதே எப்படி ஊழியர் அனுமதிப்பட்டார்? விடுதி காப்பாளர் விடுதியில் இல்லாதபோது ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டது எப்படி? பெண்கள் விடுதியில் ஆண் ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது, அதனை கண்காணிக்க வேண்டியது யார்? பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான சட்ட உதவிகளை செய்திருக்க வேண்டியது யார் ? என்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள்

1) விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும்.

2) அவதூறாக பேசிய 3 காப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3) வெளி ஊழியர்கள் பணிக்கு வரும்போது விடுதி காப்பாளர் உடன் இருக்க வேண்டும்,

4) மாணவிகள் தனியாக இருக்கும் போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

5) பாலியல் அத்துமீறல்கள் இனி நிகழா வண்ணம் நடவடிக்கை அவசியம். உட்பட மாணவர்கள் தரப்பிலிருந்து 13 கோரிக்கைகள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வார்டன் மன்னிப்பு கேட்டு இருப்பதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.