பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் உருமாறிய கொரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்த 80 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியானதாக, திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். பூந்தமல்லி, வில்லிவாக்கம், திருத்தணி, புழல், திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்துசேர்ந்த அவர்கள் 80 பேரும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் கூறினார். அவர்களை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பொன்னையா தெரிவித்தார்.
அதேபோல், இங்கிலாந்தில் இருந்து நீலகிரிக்கு வந்துள்ள 16 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். உதகை அரசு பாலிடெக்னிக்கில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நவம்பரில் இங்கிலாந்திலிருந்து வந்த 328 பேரையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.
முன்னதாக, பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்றத்தூர் மற்றும் காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த அந்த 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதோடு, ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனிடையே, பிரிட்டனில் இருந்து கடந்த சில தினங்களில் தமிழகம் வந்த சுமார் இரண்டாயிரத்து 800 பேர் முழு கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.