விண்கல் புதியதலைமுறை
தமிழ்நாடு

Woooww..!! வானில் நிகழ்ந்த அதிசயம்.. இரவை பகலாக்கிய விண்கல்! மிரண்டு பார்த்த மக்கள்! எங்கே தெரியுமா?

போர்ச்சுக்கல் மட்டுமின்றி ஸ்பெயினிலும் அதே விண்கல் பிரகாசமாக இரவை பகலாக்கி கொண்டு சென்றதை பலரும் பார்த்து ரசித்ததோடு, சமூக வலைதளங்களிலும் பிரமிப்புடன் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்கள் : பால வெற்றிவேல், நவநீத கிருஷ்ணன்

ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல, வானியல் சார்ந்த அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அயல் நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படியொரு வானியல் அரிய நிகழ்வு போர்ச்சுகலில் நடந்து இருக்கிறது...

இரவு நேரம்... போர்ச்சுகல் நெடுஞ்சாலை... சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது ஒரு கார்.... திடீரென இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் கண் இமைக்கும் நேரத்தில் தோன்றி மறைந்தது... நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த அந்தக் கார் ஓட்டுநர் நீல நிறத்தில் தோன்றிய வானியல் அதிசயத்தை கண்டு மிரண்டு போனார்.

விண்கல்

பிரகாசமான ஒளிக்கு என்ன காரணம் என்பதை அறிய, தனது காரின் டேஷ்போர்ட் கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்தார்... அப்போது அவருக்கு காத்திருந்தது பிரமிப்பு தான்... சத்தமே இல்லாமல் நீல நிற ஒளியை பாய்ச்சி, இரவை பகலாக்கிய அந்த வெளிச்சம் விண்கல்...

போர்ச்சுக்கல் மட்டுமின்றி ஸ்பெயினிலும் அதே விண்கல் பிரகாசமாக இரவை பகலாக்கி கொண்டு சென்றதை பலரும் பார்த்து ரசித்ததோடு, சமூக வலைதளங்களிலும் பிரமிப்புடன் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

சூரிய குடும்பத்தில் கோள்கள், துணைக்கோள்கள் மட்டுமின்றி கோடிக்கணக்கான விண்கற்களும் வலம் வருகின்றன. சுமார் 2.5 கோடி விண்கற்கள் ஆண்டுதோறும் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியின் மேற்பரப்பை நோக்கி வேகமாக வருகின்றன.

சில மீட்டர் அளவுள்ள விண்கற்கள் என்றாலும், அவை பூமியின் மீது விழும்போது அதனால் ஏற்படும் இழப்புகள் பெரிதாக இருக்கும். ஆனால், பல கோடி ஆண்டுகளாக பூமியின் மீது விண்கற்கள் விழாமல் பாதுகாப்பது வளிமண்டலம்தான். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..

பூமியிலிருந்து 60 முதல் 80 கிலோ மீட்டர் உயரத்தில் இருப்பதுதான் மெசோஸ்ஃபியர் (MESOSPHERE) எனப்படும் பகுதி. இதன் அருகே விண்கற்கள் வரும்போது உராய்வு காரணமாக விண்கற்கள் எரிந்து துண்டு துண்டாக சிதறுகின்றன. பூமியின் வளிமண்டலம் விண்கற்களை, பூமியின் மேற்பரப்பில் விழாமல் அந்த அளவுக்கு பாதுகாக்கிறது. சில நேரங்களில் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் விழும் விண்கற்கள், துண்டு, துண்டாக உடைந்து புவி ஈர்ப்பு விசை காரணமாக, பூமியை நோக்கி இழுக்கப்படும். அப்போது பூமியின் தரைமட்டத்தில் இருந்து 20 முதல் 30 கிலோ மீட்டர் உயரத்தில் உடைந்த அந்த விண்கல் பகுதிகள் பயணிக்கும்போது, உராய்வு காரணமாக ஒளிக்கீற்றுகள் உண்டாகின்றன.

அப்படி ஒரு விண்கல்தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தென்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 15,000 டன் அளவிற்கு விண்கற்களின் பாகங்கள் பூமியின் மேற்பரப்பில் துகள்களாக விழுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விண்கற்களின் ஈர்ப்பால் பூமிக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், விண்கற்கள் விழும் இடத்தில் அதன் துகள்களை பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

போர்ச்சுகலில் தென்பட்ட விண்கல் துகள்கள், அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் தற்போது கணித்திருக்கின்றனர்.

பெரிய அளவிலான விண்கற்களோ, வால் நட்சத்திரமோ பூமியின் மீது மோதினால் மட்டுமே மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என விளக்கம் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.