தமிழ்நாடு

மதுரையில் சிறுமி கடத்தல்: அதிர்ச்சியூட்டும் கைதானவர்களின் விவரங்கள்

மதுரையில் சிறுமி கடத்தல்: அதிர்ச்சியூட்டும் கைதானவர்களின் விவரங்கள்

நிவேதா ஜெகராஜா

மதுரை மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட வழக்கில், இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் உள்பட மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம், மதுரையில் 17வயது சிறுமி காணாமல் போன நிலையில், காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நாகூர் ஹனிபா என்ற நபர், சிறுமியை காதலிப்பதாகக்கூறி அவரை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுமியை ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நாகூர் ஹனிபா அழைத்துச் சென்றுள்ளார். இதனால் பிரச்னை ஏற்படுமோ என அஞ்சி, நாகூர் ஹனிபாவும், சிறுமியும் தற்கொலை செய்து கொள்ளலாம் எனக்கூறி எலி மருந்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எலி மருந்து சாப்பிட்டதைக் கூறாமல், சிறுமியை தனியார் மருத்துவமனையில் நாகூர் அனிபா அனுமதித்துள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், சிறுமியை அழைத்துச் சென்று, அவரது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற நாகூர் ஹனிபா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மதினா பேகம் உள்ளிட்ட ஏழு பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என மருத்துவர்களின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்த வழக்கில், மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.