தமிழ்நாடு

‘வீட்டிற்குள் அம்மா சேர்க்கவில்லை’ -தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகர்

‘வீட்டிற்குள் அம்மா சேர்க்கவில்லை’ -தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகர்

Sinekadhara

வீட்டிற்குள் தனது தாய் சேர்க்கவில்லை என சின்னத்திரை நடிகர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு பெர்னான்டோ. சின்னத்திரை மற்றும் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தாயும், தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தந்தையுடன் வசித்து வந்த ஜெரால்டு, அவர் இறந்த பிறகு தாய் ஜோஸ்மீன் கமலா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால், வழக்கறிஞர் பேச்சைக்கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய இவர் வீடு இல்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். தாய் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கவேண்டும் எனக் கோரி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் அவரது தாய் வீட்டிற்குள் அனுமதிக்காததால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இடப் பிரச்னை இருக்கிற காரணத்தினால் நீதிமன்றத்தை நாடுமாறு காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் காவலாளியாக வேலை பார்ப்பதால் வழக்கு நடத்த முடியாது எனக் கூறி தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தாய் வீட்டிற்குள் சேர்க்காததால் மன விரக்தி ஏற்பட்டு இன்று காவல் ஆணையர் அலுவலகம் அருகே ஜெரால்டு பெர்னான்டோ மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்றிய போலீசார் அருகில் உள்ள வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளனர்.