தமிழ்நாடு

ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

PT
மத்திய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போலத் தமிழக அரசு மக்கள் ஐடி என்ற எண்ணை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது, அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல நம் மாநில அரசு தமிழக மக்களுக்கு எனத் தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது.
ஆதார் போலத் தமிழக மக்களுக்குத் தனி ஐடி உருவாக்கத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து மாநில குடும்ப தரவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியைத் தொடங்கி உள்ளது. தரவுகளைச் சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்கத் திறமையும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு டெண்டர் அறிவித்துள்ளது. மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையைத் துல்லியமாகக் கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண்ணைப் படியாக வைத்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.