செந்தில் பாலாஜி கோப்புப்படம்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வெளியே வருவதில் திடீர் சிக்கல்.. நீதிபதி சொல்வது என்ன? வழக்கறிஞர்கள் வாதம் என்ன?

நீதிமன்ற நீதிபதி முழுமையான விசாரணை முடிந்த பின் உத்தரவு நகல் கொடுத்தால் மட்டுமே செந்தில்பாலாஜி வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இல்லையெனில் அவர் நாளை வெளிவருவதற்கான சாத்தியங்கள் தான் உள்ளன.

PT WEB

செய்தியாளர் ராஜ்குமார்

வழங்கப்பட்ட பிணை

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 50க்கும் அதிகமான முறை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக பிணை வழங்கப்பட்டது. வழக்கு

விசாரணை நிறைவடைய நீண்ட காலமாகும், நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்ற காரணங்களுக்காக அவருக்கு பிணை வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறிப்பாக, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடவும், சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. விசாரணை கைதியாகவே இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், 25 லட்சம் ரூபாய்க்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும், வெளிநாடு செல்லத் தடை உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

செந்தில் பாலாஜி வெளியில் வர வாய்ப்பு இருந்த நிலையில் புழல் சிறை முன் திமுக தொண்டர்கள் அதிகமானோர் குவிந்தனர். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி வெளியே வருவதில் புதிய சிக்கல் எழுந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பங்கள் 

செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்தில் கிடைத்த நிபந்தனை பிணை தொடர்பாக முறையிட்டனர்.

இந்த வழக்கில், செந்தில்பாலாஜிக்கு இரு நபர்கள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், நீதிபதி கார்த்திகேயன், இந்த சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம், இருநபர் உத்தரவாத அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி

மேலும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதில், “பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை” என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

வெளியே வருவதில் சிக்கல்

செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில், “உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இருநபர் உத்தரவாதத்தினை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லை. இன்று வெளியே விடக்கூடாது என முடிவு செய்துவிட்டது போல் செயல்படுகிறீகள். தீர்ப்பில் குழப்பம் இருப்பின் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விளக்கத்தைப் பெறுகிறோம்” என தெரிவித்தார்.

செந்தில்பாலாஜியும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் புழல் சிறையில் இருந்து ஆஜரானார். பின் செந்தில் பாலாஜியின் காவல்நீட்டிப்பு தொடர்பான வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வரும்படி நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமர்வு நீதிமன்ற நீதிபதி முழுமையான விசாரணை முடிந்த பின் உத்தரவு நகல் கொடுத்தால் மட்டுமே செந்தில்பாலாஜி வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இல்லையெனில் அவர் நாளை வெளிவருவதற்கான சாத்தியங்கள் தான் உள்ளன.