தமிழ்நாடு

"திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது"- செந்தில் பாலாஜி

"திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது"- செந்தில் பாலாஜி

webteam
“அதிமுக ஆட்சியில் 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. டெல்டா பகுதியிலேயே 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய செந்தில் பாலாஜி, “கடந்த 26.2.2021 அன்று தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 25.2.2021 அன்று தான் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதுவரை டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. சொல்லப்போனால் அவர்கள் (அதிமுக) ஆட்சியில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை. அதனால் தான் கடைசி நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதுவும் 1.4.2021 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்து‌. அதுவரை அவர்களால் 24 மணி நேரம் மின்சார வழங்கப்படவில்லை.
ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. எங்களால் அடுத்த ஓராண்டில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முடியும். இதற்காக கட்டமைப்பு வலுபடுத்தப்பட்டு வருகிறது. புதிதாக 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும். ஒரே வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் கூட அந்த மின் இணைப்புகளை இணைக்க வேண்டியது இல்லை. வீடுகளுக்கான மின் இணைப்பை இணைக்க வேண்டும் என்று‌ மின்சார வாரியம் எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை.
திருவரம்பூர் பகுதியில் மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்பது தன்னிச்சையாக மின்துறை ஏ.இ. ஒருவர் அனுப்பி உள்ளார். அனுமதியின்றி தன்னிச்சையாக அவர் அனுப்பியுள்ளார். உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி மின் இணைப்புகளை இணைக்க வேண்டும் என்று அவர் தன்னிச்சையாக அனுப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் அதிகபட்ச மின்சார தேவையாக நாள் ஒன்றுக்கு 18,500 மெகாவாட் மின்சாரம் தேவை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோடை காலத்தில் மின் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியே இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு யூனிட் ரூ. 12 முதல் ரூ. 20 வரையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டும். தற்போது ஒரு யூனிட் ரூ.8.50 க்கு என்று குறைந்த விலையில் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றுள்ளார்.